நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுடெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பிலும், மாணவர் அமைப்புகள் சார்பிலும் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், அமைச்சரின் ராஜினாமாவில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளாகக் கல்வித்துறைக்காகத் தாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டியுள்ள தர்மேந்திர பிரதான், “கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சம்பவங்கள் எனது இதயத்தை நொறுக்கிவிட்டன” எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டவுடன் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, மறுதேர்வு கணினி வழியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்வில் எந்தவொரு தகுதியுள்ள மாணவருக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருந்ததாகவும் விளக்கியுள்ளார்.
தமது தனிப்பட்ட கௌரவத்தை விட நாட்டின் ஒற்றுமையும் மாணவர்களின் எதிர்காலமுமே முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சூழலைத் தேசவிரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் உண்மையான பலம் இளைஞர்களே என்றும், ஒடிசா மக்கள் மற்றும் இந்திய இளைஞர்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். தர்மேந்திர பிரதானின் இந்த ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
