தாராபுரத்தில் இறக்கப்பட்ட ‘காங்கிரஸ் அதிரடிப் படை’….. கூட்டணி வேட்பாளருக்காக மாணிக்கம் தாகூர் போட்ட மாஸ் பிளான்….. அமைச்சர், எம்.பி.க்களுக்கு முக்கிய பொறுப்பு….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

நடைபெறவுள்ள தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி பி. சத்யாபாமா அவர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரம்மாண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது. தொகுதி முழுவதையும் தீவிரமாகக் கண்காணித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, 317 வாக்குச் சாவடிகள் 31 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப் படை போன்ற தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இத்தேர்தல் பணிக்குழுவின் தலைவராக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு எஸ். ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி எஸ். ஜோதிமணி மற்றும் திரு எம். கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் துணைத்தலைவர்களாகச் செயல்படவுள்ளனர். மேலும், திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான திரு பி. கிட்டுசாமி மற்றும் முன்னாள் தலைவர் திரு கே. தென்னரசு ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பேற்று தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

   

தொகுதி வாக்காளர்களை முழுமையாகச் சென்றடையும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 31 மண்டலங்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அதிக வாக்குச்சாவடிகளைக் கொண்ட மூலனூர் மண்டலத்திற்கு (16 வாக்குச் சாவடிகள்) திரு துரை மணிகண்டனும், கடைவீதி மண்டலத்திற்கு (15 வாக்குச் சாவடிகள்) திரு பி.ஆர். ரங்கராஜனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சங்கரண்டாம்பாளையம் (14 பூத்கள்) உள்ளிட்ட முக்கிய பெரிய மண்டலங்களிலும் விரிவான தேர்தல் களப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

   

தேர்தல் களத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான திரு ஆர். எம். பழனிசாமி, திரு எம்.என். கந்தசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் வாக்காளர்களின் ஆதரவைப் திரட்டும் வகையில் கரூர் எம்.பி. செல்வி எஸ். ஜோதிமணி தீவிர களப்பணியாற்றவுள்ளார். தாராபுரம் நகர காங்கிரஸ் தலைவர் கே. செந்தில்குமார் மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து கூட்டணி வேட்பாளரின் மாபெரும் வெற்றிக்காகக் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.