தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகரான தனுஷ், கல்வித்துறையில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்காகத் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இலவச குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு டியூஷன் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்படவுள்ளனர்.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் இந்தத் திட்டமானது, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுத் தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. ஏற்கனவே கலைத்துறையில் கோலோச்சி வரும் தனுஷ், தற்போது இத்தகைய சமூக நலத்திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களைச் சென்றடையத் திட்டமிட்டிருப்பது, அவரது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதோடு, திரையுல மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
