வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த வாலிபரின் தலையில் தையல் ஊசி உடைந்த நிலையிலேயே தையல் போடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொத்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தனுஷ் என்பவர், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது ஏற்பட்ட காயத்திற்காக இம்மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் நிஷா அறிவுறுத்தலின்படி, கம்பவுண்டர் லட்சுமணன் என்பவர் தையல் போட்டபோது ஊசி எதிர்பாராமல் உடைந்து தலையிலேயே சிக்கியுள்ளது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் உடைந்த ஊசியுடன் சேர்த்து முழுவதுமாக தையல் போட்டு வாலிபரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அதன்பின்னர் தாங்க முடியாத தலைவலியால் துடித்த தனுஷ், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகியபோதுதான், ஸ்கேன் பரிசோதனையில் அவர் தலையில் ஊசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து அரசு மருத்துவரிடம் முறையிட்டபோது, “இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான், இதை பெரிதாக்க வேண்டாம்” என்று அவர் அலட்சியமாகப் பதிலளித்ததோடு, “நாங்கள் அரசு ஊழியர்கள், எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
