வெற்றிமாறன் & தனுஷ் கூட்டணியில் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட இந்த இரண்டு படங்கள் பற்றி தெரியுமா..!

By vinoth on மாசி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் அதிக சமரசங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் அவர் இயக்கிய விடுதலை 2 மட்டும் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

   

இதையடுத்து அவர் நீண்டகாலமாகக் காத்திருக்கும் வாடிவாசல் படத்தைத் தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் சூர்யா, அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

 

வெற்றிமாறன் இயக்கத்தில் பெருவெற்றி பெற்ற பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களின் வெற்றியில் தனுஷுக்கும் அளப்பறிய பங்குண்டு. அதே போல தனுஷை ஒரு மிகச்சிறந்த நடிகராக செதுக்கியதில் வெற்றிமாறனுக்கும் பங்குண்டு. ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து நான்கு படங்களில் பணியாற்றியுள்ளனர். இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் ‘சூதாடி’ என்றொரு படம் தொடங்கப்பட்டது. சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் அதன் பிறகு கைவிடப்பட்டது. அதே போல 2014 ஆம் ஆண்டு வாக்கில் வேங்கைச்சாமி என்றொரு படம் இருவர் கூட்டணியில் உருவாக இருந்தது. பின்னர் அந்த படமும் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் வேங்கைச்சாமி கதையில் மாற்றங்கள் செய்து விடுதலை முதல் பாகத்தில் பயன்படுத்தினார் வெற்றிமாறன். அதே போல சூதாடி கதைதான் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.