தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.
இதற்கிடையில் அவரின் பழைய ஹிட் பாடல்கள் லியோ மற்றும் வாழை ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்டு தற்போது இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஹிட்டாகி வருகின்றன. அதுபற்றி பேசியுள்ள தேவா “நான் என்னுடைய பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பதில்லை. அதனால்தான் என் பாடலை எல்லோரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனக்கு அதன் மூலம் வரும் பணம் பெரிதல்ல, புகழ்தான் வேண்டும். என்னுடைய பாடல்களை இப்போதிருக்கும் குழந்தைகள் ரசிப்பதைப் பார்ப்பதுதான் மகிழ்ச்சி” எனக் கூறியிருந்தார்.
தேவாவின் இந்த கருத்தை ஒரு சிலர் கொண்டாடினாலும், மற்றொரு தரப்பினர் தேவாவின் பல ஹிட் பாடல்கள் வேறு பாடல்களின் காப்பி. இதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். அதனால் அவர்தான் அந்த இசையமைப்பாளர்களுக்குக் காப்பிரைட் கொடுக்கவேண்டும். அவர் கேட்க முடியாது எனக் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.