1986 ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் தேவா. தொடர்ந்து மனசுக்கேத்த மகராசா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த தேவா 1990 ஆம் ஆண்டு தன்னுடைய மூன்றாவது படமான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில அரசின் விருதை பெற்றார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் காலம் கடந்தும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்த தேவா 1992 ஆம் ஆண்டு மட்டும் 25 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதில் ஒன்றுதான் ரஜினி நடித்த அண்ணாமலை. ரஜினியுடன் தேவா இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படமான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே இந்த திரைப்படத்திற்காக தேவா போட்ட பிஜிஎம் தான் ரஜினிகாந்த் டைட்டில் கார்டுக்கு இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படத்தில் குஷ்பூ மற்றும் மனோரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினி திரைத்துறையில் அறிமுகமாக காரணமாக இருந்த இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய போது ஒருநாள் இயக்குனர் கே பாலசந்தர் இசையமைப்பாளர் தேவாவிற்கு ஃபோன் செய்து அவசரமாக ஒரு பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். ரஜினி மற்றும் குஷ்பூ கால் சூட் நாளை மாலை 3 மணிக்கு இருக்கு காலையில் உடனடியாக ஒரு பாட்டு தேவை, நீ உடனே ரெடி பண்ணி கொடுக்கணும் என்று சொல்ல, ரஜினி சார் படம் நீங்க தயாரிப்பாளர் இப்படி திடீர்னு கேட்டா எப்படி பாட்டு வரும் என்னால எப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள் என தேவா கேட்டுள்ளார். உன்னால் முடியும் என்று கே.பாலசுந்தர் சொல்ல அந்த வார்த்தையை கேட்ட தேவா மறுநாள் காலை என்ன ராகத்தில் பாடல் போடுகிறோம் என்று தெரியாமல் அத்தனை வாத்தியங்களையும் ஏவியம் ஸ்டுடியோவிற்கு வர வைத்துள்ளார்.
இசையமைக்க தேவா, பாடல் எழுத வைரமுத்து மற்றும் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய மூன்று பேரும் பாடலை உருவாக்க அமர்ந்திருந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய கம்போசிங் சரியாக 7.10 மணிக்கு முடிவடைந்துள்ளது. அதன் பிறகு அந்த மெட்டுக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுத உடனடியாக எஸ்வி பாலசுப்பிரமணியன் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோர் பாடல் பாடி முடித்து மதியம் 2 மணிக்கு பாடலை படபிடிப்பு அனுப்பியுள்ளனர். அப்படி பத்து நிமிடத்தில் உருவான பாடல் தான் ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்ற பாடல். இந்தப் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.