மருத்துவமனையா?… மரணக் கூடாரமா?… கதறும் பெற்றோர்… எய்ம்ஸ் சொன்ன அதிர்ச்சி உண்மை…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் பாண்டா பகுதியைச் சேர்ந்த இந்திரஜ் விஸ்வகர்மா என்பவரது 19 மாதக் குழந்தை வினய்க்கு, கடந்த மே 29 அன்று கடுமையான சளி, இருமல் மற்றும் கண்கள் லேசாகச் சிவந்து காணப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள அரசு சிவில் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர், குழந்தையைப் பரிசோதித்துவிட்டு சளிக்காகத் தர வேண்டிய மூக்கு சொட்டு மருந்தை (Nasal Drops) மாற்றி, குழந்தையின் இரண்டு கண்களிலும் ஊற்றியுள்ளார். மேலும், பாராசிட்டமால் சிரப் மற்றும் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டுள்ளது. மருந்து ஊற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் கண்கள் இரண்டும் பயங்கரமாக வீங்கி, வலியால் குழந்தை கதறி அழுதுள்ளது.

அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்தும் நிலைமை சீராகாததால், குழந்தை உடனடியாக சாகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த கண் மருத்துவ நிபுணர்கள், குழந்தையின் இரண்டு கண்களின் பார்வையும் முற்றிலும் பறிபோய்விட்டதாகவும், இனி அதனைச் சரிசெய்ய முடியாது என்றும் பெற்றோரிடம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். மருத்துவரின் இத்தகைய தவறான சிகிச்சை மற்றும் அலட்சியப் போக்கே குழந்தையின் பார்வை இழப்புக்குக் காரணம் என்பதை எய்ம்ஸ் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறி, குழந்தையின் தந்தை தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது