நடிகை த்ரிஷா துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எழுப்பிய அரசியல் குற்றச்சாட்டை, தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது திரைப்படப் பங்களிப்பாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக ஆர்.பி. உதயகுமார் விமர்சித்திருந்தார். இந்த வரிசையில், முதலமைச்சரின் நீண்ட காலத் திரைப்படத் தோழியான நடிகை த்ரிஷாவும் விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியது பெரும் அரசியல் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் அதிருப்தியடைந்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அத்தகையத் தகவல் முற்றிலும் பொய்யானது என்று விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், தகுதியும், நிர்வாகப் பொருத்தமும் உள்ள நபர்களுக்கு மட்டுமே அரசுப் பொறுப்புகள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவுபடுத்தினார். இந்த அதிரடி மறுப்பின் மூலம், நடிகை த்ரிஷா குறித்த அரசியல் ஊகங்களுக்குத் தவெக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
