பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய இளம்பெண் ஒருவருக்கு, அவரது வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள 3BHK பிளாட் ஒன்றில் அந்த இளம்பெண் தனது இரண்டு தோழிகளுடன் தங்கியிருந்தார். இதற்காக அவர்கள் சுமார் 2.4 லட்சம் ரூபாயை முன்பணமாக (Security Deposit) செலுத்தி, முறையான மாத வாடகையையும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டை விற்கப் போவதாகக் கூறி உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால், எந்தப் பிரச்சினையும் இன்றி அவர்கள் வீட்டை காலி செய்துள்ளனர்.
ஆனால், முன்பணத்தைத் திருப்பித் தரும்போது உரிமையாளர் காட்டிய கணக்கு அந்தப் பெண்ணை அதிர்ச்சியடைய வைத்தது. மொத்தத் தொகையில் வெறும் 18,000 ரூபாயை மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 52,000 ரூபாயை ஏசி சர்வீஸ், வீட்டை சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் உரிமையாளர் பிடிமானம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கேள்வி எழுப்பியபோது, உரிமையாளர் இன்னும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதோடு, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் எண்ணையும் பிளாக் (Block) செய்துள்ளார்.
தான் வீட்டை மிகச் சரியான நிலையிலேயே ஒப்படைத்ததாகவும், இவ்வளவு பெரிய தொகையை அநியாயமாகப் பிடித்தம் செய்தது தவறு என்றும் அந்தப் பெண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். “இன்னும் 15 நாட்களுக்குள் எனது பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், நிச்சயமாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் செல்வேன்” என அவர் எச்சரித்துள்ளார். பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு இருப்பவர்கள் சந்திக்கும் இத்தகைய “டெபாசிட் மோசடிகள்” குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
