தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் பிரச்சனைகள் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் இத்திரைப்படம், முழுமையாக இணையத்தில் வெளியானதற்கு ரஜினி, கமல் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே தனது அரசியல் வருகை மற்றும் கடைசி பட ரிலீஸில் சில சதி வேலைகள் நடப்பதாக விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த லீக் சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் பதிவிட்ட ட்வீட் ஒன்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “ஒரு வகையில் கசிந்தது நன்மைக்கே” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரு படத்தின் உழைப்பு திருடப்படுவதை எப்படி நியாயப்படுத்தலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க அல்லது அதிகாரப்பூர்வ ரிலீஸை விரைவுபடுத்த அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, ‘ஜனநாயகன்’ படத்தின் லீக் மற்றும் மில்டனின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
