பெங்களூருவில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பார்சலை வழங்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப் பெண்ணின் வீட்டிற்கு வந்த அந்த ஊழியர், அவசரத் தேவைக்காக அவரது வீட்டு கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அப் பெண் பலமுறை திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததுடன், அண்டை வீட்டாரிடம் சென்று உதவி கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் அனுமதியை சற்றும் பொருட்படுத்தாத அந்த நபர், தனது காலணிகளைக் கழற்றிவிட்டு வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அங்குள்ள குளியலறைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த அந்த டெலிவரி ஊழியர், திடீரென தனது ஆடைகளைக் களைந்து அப்பெண்ணின் முன்னால் நிர்வாணமாக நின்று அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அப்பெண், தனது பாதுகாப்பைக் கருதி அலைபேசி கேமராவை இயக்கியதுடன், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் வெளியே ஓடித் தப்பிப்பதற்காக வீட்டின் முன் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நுழைவாயில் அருகிலேயே அச்சத்துடன் நின்றதாகத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சொந்த வீட்டிலேயே தனது தனிமனித உரிமை மீறப்பட்டு, பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட ஆதங்கம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
