டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில், வாடிக்கையாளர் கொடுத்த கிழிந்த 10 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், டெலிவரி ஊழியரான 24 வயது சமீர் உசேன் என்பவர் தாக்கப்பட்டு பின் மன உளைச்சலில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். காபி டெலிவரி கொடுக்கச் சென்றபோது கிழிந்த நோட்டை வாங்க மறுத்த சமீரை, வாடிக்கையாளரான முதியவர் மற்றும் மற்றொருவர் அவதூறாகப் பேசி கன்னத்தில் அறைந்து அவரது நடுத்தரப் பின்னணியைக் கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து சமீர் போலீசாருக்குப் புகாரளித்த நிலையில், மனமுடைந்து விஷமருந்திய அவர் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 20 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ராகேஷ் மற்றும் ராம்பால் சிங் ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
