“ஷூ ஆர்டர்” செய்த வாடிக்கையாளர் செய்த காரியம்… டெலிவரி ஊழியர்கள் ரூமுக்குள் பார்த்த அதிர்ச்சி காட்சி…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

சென்னையில் ‘ஜெப்டோ’ (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா சேவியோ என்ற டெலிவரி ஊழியர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்து இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் புதிய பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, அவற்றைத் திருப்பி அனுப்பும்போது பழைய மற்றும் கிழிந்த பொருட்களை பார்சலில் வைத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அந்த நபர் நான்கு ஜோடி புதிய ஷூக்களை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அவற்றை ‘ரிட்டர்ன்’ செய்வதாகக் கூறி, ஊழியரிடம் பார்சலை வழங்கியுள்ளார். புதிய ஊழியர் ஒருவர் அந்தப் பார்சலைச் சரியாகச் சோதிக்காமல் பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் நிறுவனத்தில் வைத்துப் பார்த்தபோது, அதில் புதிய ஷூக்களுக்குப் பதிலாகப் பழைய தேய்ந்து போன ஷூக்கள் இருந்தது தெரியவந்தது. இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்ததால் சந்தேகமடைந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அந்த வாடிக்கையாளரின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.

   

ஆரம்பத்தில் தான் எந்த மோசடியும் செய்யவில்லை என்று மறுத்த அந்த நபர், ஊழியர்களின் விடாப்பிடியான விசாரணையால் இறுதியில் சிக்கிக்கொண்டார். ஊழியர்கள் அவரது அறையைச் சோதித்தபோது, டேபிளுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த புதிய ஷூக்களைக் கண்டுபிடித்தனர். வாடிக்கையாளரின் இந்த ஏமாற்று வேலையைக் கண்டித்த ஊழியர்கள், பொருட்களைச் சேதமடைந்த நிலையில் பெறுபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வழங்கப்பட்டுள்ள ‘ரிட்டர்ன்’ வசதியைச் சிலர் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.