வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆன்லைன் ஆர்டருக்கான பணத்தை டெலிவரி ஊழியரிடம் கொடுக்கும்போது கள்ள நோட்டு புழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது. தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ரபிக் (48) என்பவர், ஆன்லைனில் வாங்கிய பொருட்களுக்கு டெலிவரி ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளார். அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததை அடுத்து, டெலிவரி ஊழியர் உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, ரபிக்கின் உணவகத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ள நோட்டுகளைக் கைப்பற்றினர். இவரிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், இவருடன் தொடர்புடைய ஜிபேர் ரஹ்மத், டிடி மோட்டூர் காமராஜ், சங்கராபுரம் கோபால் மற்றும் ஆம்பூர் பாபு (65) உள்ளிட்டோரிடம் இருந்தும் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக இவர்களிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், இந்த கள்ள நோட்டுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து வாங்கி வரப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ரபிக் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், இவர்களது நெட்வொர்க் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
