நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி ஜெய்பால் ராணா என்பவரின் வயல் அருகே மிகவும் அழுகிய நிலையில் அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலின் சில பகுதிகளை தெருநாய்கள் கடித்திருந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்த அவ்வுடலைக் காவல்துறையினர் மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட சிறுமியும் குற்றவாளிகளும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அனைவரும் ஒரு டெம்போ வாகனத்தில் ஒன்றாகப் பயணித்து மது அருந்தியுள்ளனர். அப்போது அச்சிறுமியை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, உடலைத் திறந்தவெளியில் வீசிச் சென்றுள்ளது. சிறுமி அடிக்கடி வீட்டை விட்டுச் சென்று மீண்டும் திரும்புவது வழக்கம் என்பதால், குடும்பத்தினர் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

   

இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான ஒரு டெம்போ வாகனத்தின் நகர்வு கண்டறியப்பட்டது. தொடர்ந்து தீவிர கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இரவோடு இரவான சோதனையில், அந்த வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டனர்.

   

ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இக்கொடூர குற்றத்தில் தொடர்புடைய கடா காலனியைச் சேர்ந்த சிவம் (என்ற சுதாமா) மற்றும் 16, 17 வயதுடைய 3 சிறார்கள் உட்பட மொத்தம் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள், குற்றவாளிகளின் ஆடைகள் மற்றும் டெம்போ வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.