மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் சாடியோ காமாரா தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பமாக்கோ அருகே உள்ள அமைச்சரின் இல்லத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் மோதி வெடித்ததில், அவரோடு சேர்ந்து அவரது குடும்பத்தினரும் உயிரிழந்தனர். அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பும், கிளர்ச்சியாளர் குழுவும் இணைந்து இந்தத் திட்டமிட்டத் தாக்குதலை நடத்தியுள்ளன. அமைச்சரின் இல்லம் மட்டுமின்றி, அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் பல்வேறு நகரங்களிலும் ஒரே நேரத்தில் இந்தத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாலி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரமான ‘கிடால்’ தற்போது கிளர்ச்சியாளர்களின் வசமாகியுள்ளது. ரஷ்யாவின் வாக்னர் குழுவின் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட இடங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதால், அந்நாட்டு ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகரில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது. சர்வதேசத் தலைவர்கள் இந்த வன்முறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மாலி நாடு தற்போது போர் மேகங்கள் சூழ்ந்த பதற்றமான சூழலில் உள்ளது.
