வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், அயப்பாக்கம் முன்னாள் தலைவருமான துரை வீரமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த இந்தப் புகாரின் அடிப்படையில், திமுக தலைமை அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து சில நிர்வாகிகள் தவெக பக்கம் செல்வதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியான திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரும் அதே முடிவை எடுக்க முயன்றதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த பல அதிருப்தி நிர்வாகிகள், தவெகவில் இணையும் மனநிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
