உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றி, திருமணமான முதல் இரவிலேயே கணவனின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பியோடிய பெண்ணின் விசித்திர மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான அபிஷேக் என்பவருக்கு, சமூக வலைத்தளம் மூலமாக புடான் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி போல அரசு அலுவலகங்களில் இருப்பது போன்ற போலி புகைப்படங்களை பதிவேற்றி சாதனாவும் அவரது குடும்பத்தினரும் நாடகமாடியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அபிஷேக், இருவீட்டார் சம்மதத்துடன் சாதனாவைத் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு முதலிரவு அன்று கணவர் அபிஷேக் நன்கு தூங்கிய இடைவெளியைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளைத் திருடிக்கொண்டு சாதனா நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார். மறுநாள் காலையில் விழித்துப் பார்த்த அபிஷேக், மனைவி மற்றும் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சாதனாவின் ஊருக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தபோதுதான், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியே இல்லை என்பதும், அந்தப் பெண்ணின் குடும்பமே திட்டமிட்டு பலரை இப்படி ஏமாற்றி வரும் ஒரு மோசடிக் கும்பல் என்பதும் தெரியவந்தது. மேலும், திருமணத்திற்கு முன்பே மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கூறி அபிஷேக்கிடம் 40 லட்ச ரூபாய் பணமும், அவரது தந்தையின் நிலத்தையும் சாதனா கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளிவந்தது.
இதனையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிஷேக் பரேலியில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மெகா மோசடி குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சாதனாவின் ஏமாற்று வேலைகள் அனைத்தும் உண்மையாக இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்த சாதனாவைத் தனிப்படை அமைத்துத் தேடிய காவல்துறையினர், தற்போது அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை நரேந்திர பால் சிங் மற்றும் சகோதரர் சூர்யா பிரதாப் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதனா இதுபோல வேறு எத்தனை பேரை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
