எப்போதும் நேர்மறை எண்ணங்களையும், வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் விதைக்கும் கருத்துகளைப் பேசி புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன், அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலரின் மனதையும் உருக வைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்காம் நிலை புற்றுநோயுடன் போராடி வந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் பிறருக்கு உற்சாகம் அளித்து வந்த அவர், தற்போது தனது குரலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் அதில் பகிர்ந்துள்ளார்.
தான் எதிர்கொண்டு வரும் இந்த கடினமான சூழல் குறித்துப் பேசிய ராஜஸ்ரீ ஜெய்சன், “நான் வாயைத் திறந்தால் குரலுக்குப் பதிலாகக் காற்றுதான் வருகிறது. என்னுடைய குழந்தைகள் ‘எப்போது பழையபடி பேசுவீர்கள்?’ என்று கேட்கும்போது நெஞ்சம் மிகவும் வலிக்கிறது” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதுவரை தனது வலிகளையும் வேதனைகளையும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்ந்து வந்ததாகவும், இனி அதை மனதிற்குள் பூட்டி வைக்க முடியாத சூழலில்தான் இந்த வீடியோவைப் பகிர்வதாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
https://www.instagram.com/reel/DazD1zvoqab/?utm_source=ig_web_button_share_sheet
இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களான அனிதா சம்பத், ரேகா உள்ளிட்ட பலரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அவருக்குத் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘உங்களின் தன்னம்பிக்கை உங்களை மீண்டும் பழையபடி பேச வைக்கும்’ என்றும், இந்த நோயிலிருந்து மீண்டு விரைவில் பூரண குணமடைந்து திரும்புவீர்கள் என்றும் எண்ணற்றோர் அவருக்கு ஆதரவாகப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
