பெங்களூருவில் ஆறு வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், கடுகோடி போலீசார் இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குழந்தையின் தாயும் வழக்கறிஞருமான பிரியங்கா மற்றும் அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மோகன் ஜி. மகாலிங்கப்பா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன் தற்போது ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தாவணகெரேயில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியின் நிறுவனரும், சிறுமியின் தந்தையுமான பிரவீன் பசப்பா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025-ல் பிரியங்கா பெங்களூரு சென்ற பிறகு தங்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகவும், அங்கு அவர் தனது முன்னாள் கல்லூரித் தோழரான மோகனுடன் மீண்டும் தொடர்புகொண்டு ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் பிரவீன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 24 அன்று பிரியங்காவின் பிறந்த நாளன்று தொடங்கியுள்ளது. அன்று இரவு மோகனுடன் காபி கடைக்குச் சென்றபோது, குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டு, ஏசி-யை இயக்கியபடி காரில் தூங்க விட்டுச் சென்றதாக பிரியங்கா கூறியுள்ளார். வீட்டிற்குத் திரும்பியதும் குழந்தையைப் படுக்கையில் கிடத்தியதாகவும், மறுநாள் காலை குழந்தை கண்விழிக்காததால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் உணவு நஞ்சாக மாறி குழந்தை இறந்திருக்கலாம் என இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதியற்றதாக இருந்ததாலும், பிரியங்காவின் கூற்றில் முரண்பாடுகள் இருந்ததாலும், குழந்தையின் உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும், சம்பவம் நடந்த உடனேயே மோகன் முன்ஜாமீன் கோரியதால் காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது.
இதற்கிடையில், பிரவீன் இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை இங்கிலாந்தில் உள்ள தனது மருத்துவரான சகோதரிக்கு அனுப்பியபோது, அவரும் இதில் சதி இருப்பதாகச் சந்தேகக் கிளப்பியுள்ளார். பிரியங்காவும் மோகனும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்குக் குழந்தை தடையாக இருந்ததால், அவர்கள் குழந்தையைக் கொலை செய்துவிட்டதாக பிரவீன் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே தன் மகள் வயிற்றில் உதைக்கப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மோகனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை, சூழ்நிலை மற்றும் மருத்துவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி காவல்துறை ரத்து செய்துள்ளது. குழந்தை காரில் மூச்சுத்திணறி இறக்க விடப்பட்டதா அல்லது அதற்கு முன்பே விஷம் கொடுக்கப்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
