உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வினீத் மினோச்சா (63) என்பவர், தனது வீட்டிலேயே 26 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து போலிசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, வீட்டின் முன்னாள் வேலைக்காரன் விஷால் மற்றும் அவனது கூட்டாளி ராஜ் கிஷோர் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, வினீத்தின் 36 வயது மருமகள் ஷாலுவே இந்த கொலைக்கு மாஸ்டர் பிளான் போட்டது தெரியவந்தது. பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் வீட்டுச் செலவுகளுக்கு மாமனாரிடம் கையேந்த வேண்டியிருந்ததும், நள்ளிரவு பார்ட்டிகளுக்குச் செல்வதை மாமனார் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்துக் கண்டித்ததும் ஷாலுவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மாமனாரைக் கொல்ல ரூ.6 லட்சம் தருவதாகக் கூறி முன்னாள் வேலைக்காரன் விஷாலிடம் பேசி, வீட்டின் டூப்ளிகேட் சாவியையும் வழங்கியுள்ளார். சம்பவத்தன்று ஷாலு தன் கணவருடன் விருந்துக்குச் சென்ற நேரத்தில், விஷாலும் அவனது கூட்டாளியும் வீட்டிற்குள் புகுந்து வினீத்தை மூச்சுத்திணற வைத்துக் கொல்ல முயன்று, பின்னர் 26 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த பகீர் சம்பவத்தில் மருமகள் ஷாலு உட்பட கொலையாளிகள் அனைவரையும் போலிசார் கைது செய்தனர்.
