உஷார்..! சர்வீஸ் சென்டரில் போன் பழுது பார்க்க கொடுத்தபோது… ஊழியர் செய்த அதிர்ச்சி காரியம்… ஆதாரத்துடன் சிக்கிய வீடியோ…!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

இந்தியாவில் உள்ள சாம்சங் சேவை மையம் ஒன்றில், பழுதுபார்க்கக் கொடுக்கப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசியிலிருந்து தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சாம்சங் அலைபேசியை பழுதுபார்க்கச் கொடுத்த நபர், பின்னர் அதன் ‘ஸ்கிரீன் டைம்’  பகுதியைச் சரிபார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது அனுமதியின்றி அலைபேசியின் கேலரி  சுமார் 10 நிமிடங்களும், வாட்ஸ்அப்  சுமார் 2 நிமிடங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

சேவை மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வாடிக்கையாளரின் வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, அதில் உள்ள மீடியா கோப்புகளைப் பார்ப்பதும், ஏதோ தட்டச்சு செய்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து சேவை மைய மேலாளரிடம் கேட்டபோது, முதலில் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், பின்னர் சேவை மையத்தின் உரிமையாளர் தனக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்ததாகவும், முழுமையான சிசிடிவி காட்சிகளைத் தராமல் வெறும் 2 நிமிடக் காட்சிகளை மட்டுமே வழங்கியதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

   

தனிநபர் தரவு மற்றும் தனியுரிமை மீறப்பட்டதற்கான “உறுதியான ஆதாரம்” இதுவென்று தெரிவித்த அந்த நபர், இச்சம்பவம் தொடர்பாக நுகர்வோர் ஹெல்ப்லைன் (Consumer Helpline) மற்றும் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அலைபேசி சேவை மையங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற புகார்கள் குறித்து சாம்சங் நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.