“நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல”…போலீஸ் புகார் வரை சென்ற ‘ஆப்’ சர்ச்சை…இறுதியாக உண்மை உடைத்த தர்ஷா குப்தா…!!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய நடிகை தர்ஷா குப்தா, சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதற்காகத் தனது பெயரிலேயே புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியில் தன்னிடம் வீடியோ காலில் பேச, பிராண்டுகளை விளம்பரப்படுத்த மற்றும் பிரத்யேக சந்தாக்களுக்கு என பல ஆயிரங்களில் அதிக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது மட்டுமின்றி, அவர் மீது சிலர் புகார்கள் அளிக்கும் அளவிற்கும் நிலைமை விஸ்வரூபம் எடுத்தது.

இந்தத் தொடர் விமர்சனங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான விளக்கத்தை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தமக்குக் குடும்பம் போன்றவர்கள் என்பதால், அவர்களுக்குத் திருமண, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும், இயல்பாகப் பேசவும் மட்டுமே இந்த ‘ரினௌன்’ (Renown) செயலியில் இணையச் சம்மதித்ததாகக் கூறியுள்ளார். மேலும், அந்தத் தளத்தின் மற்ற செயல்பாடுகள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என முருகப் பெருமான் மீது சத்தியம் செய்து அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

தான் வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும், தனது தாயார் கற்றுக்கொடுத்த பண்புகளையும் தனக்கான எல்லைகளையும் பணத்திற்காகவோ புகழுக்காகவோ ஒருபோதும் மீற மாட்டேன் என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தம்மீது வீசப்படும் விமர்சனங்களை விட, தன்னை இத்தனை காலம் நேசித்தவர்கள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டதே அதிக வலியைத் தருவதாகவும், தன்னை பழைய தர்ஷாவாகவே பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த விளக்கப் பதிவைக் கண்ட ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.