ஹைதராபாத்தில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டேங்க் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு, ஆபத்தான முறையில் வண்டியை ஓட்டியபடி வேலை செய்த நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் தகவல் தொழில்நுட்ப மையமான மாதப்பூர் பகுதியிலுள்ள ஹைடெக் சிட்டி சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பிஸியான டிராஃபிக்கில் ஒரு கையால் பைக்கை ஓட்டிக்கொண்டே, மறுபுறம் லேப்டாப் திரையைப் பார்த்து அந்த நபர் கையாண்ட விதம் அங்கிருந்த சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதற்கு “வொர்க் ஃபிரைம் பைக்” என்று பெயரிட்டுள்ளனர். வீடியோவில் இருக்கும் நபர் சாலையையும் லேப்டாப்பையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இவர்தான் இந்த ஆண்டின் சிறந்த ஊழியர்” என்றும், அதே நேரத்தில் “இந்த ஆண்டின் மோசமான வாகன ஓட்டி” என்றும் சமூக வலைத்தளங்களில் கலவையான மற்றும் கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் கடுமையான வேலைப் பளு மற்றும் “ஹஸ்டல் கல்ச்சர்” எனப்படும் இடைவிடாத உழைப்புச் கலாச்சாரத்தின் ஆபத்தான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். எந்தவொரு வேலையும் ஒருவருடைய உயிருக்கு மேலானது அல்ல என்றும், லேப்டாப்பில் சில நிமிடங்கள் வேலை செய்வதற்காகத் தனது உயிரையும், சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பையும் பணயம் வைப்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
