“ஐயோ பாவம்…” முதியோர்களை குறிவைக்கும் மர்மக் கும்பல்…” போலீஸ் போல மிரட்டி 8 கோடி சுருட்டிய நபர்… உச்ச நீதிமன்ற போலி ஆவணங்கள்… பகிரங்க மிரட்டல்… நெஞ்சை பதறவைக்கும் மோசடி…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

மும்பையைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவரை சைபர் கிரிமினல் கும்பல் ‘டிஜிட்டல் கைது’ செய்து, சுமார் ரூ.8 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்பு கொண்ட அந்த மர்மக் கும்பல், ஜெட் ஏர்வேஸ் பணமோசடி வழக்கில் முதியவரின் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியமானது என்பதால் யாரிடமும் பேசக்கூடாது என்று மிரட்டி, கடந்த இரண்டு வாரங்களாக முதியவரைத் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பிலேயே வைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போலப் போலியான ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய மோசடிப் பேர்வழிகள், சரிபார்ப்பு என்ற பெயரில் அவரது மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வைப்புத்தொகைகள் அனைத்தையும் தங்களது குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றச் செய்து ஆறு தவணைகளாக மொத்தம் ரூ.7.9 கோடியை அபகரித்துள்ளனர்.

   

இதற்கிடையே, புதுடெல்லியில் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் உளவுப் பிரிவுக்கு இந்தத் தகவல் எட்டியதை அடுத்து, மும்பை மேற்கு மண்டல சைபர் போலீஸார் உடனடியாக உஷாரடைந்தனர். கடந்த 18-ஆம் தேதி முதியவரின் வீட்டிற்கே நேரில் சென்று இது ஒரு டிஜிட்டல் கைது மோசடி என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை அந்த முதியவர் தாமதமாக உணர்ந்துள்ளார். தற்போது சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இழக்கப்பட்ட தொகையை மீட்டெடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.