“ஒரே கட்சி.. ஒரே கோஷ்டி”…. தவெகவுக்கு தாவும் சி.வி. சண்முகம்?….. எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி… அதிமுகவில் வெடித்த புதிய புயல்….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகக் கடந்த சில தினங்களாகக் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக முன்னாள் கோலியனூர் ஒன்றியச் செயலாளருமான சுரேஷ்பாபு விழுப்புரம் அருகே உள்ள சகாதேவன்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “கட்சியை விட்டு விலகும் எண்ணம் தனக்கோ, தனது ஆதரவாளர்களுக்கோ அல்லது சி.வி. சண்முகத்திற்கோ சிறிதும் இல்லை. ‘ஒரே கட்சி, ஒரே கோஷ்டி’ என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து அதிமுகவிலேயே பயணிப்போம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

1991-ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளதாகக் குறிப்பிட்ட சுரேஷ்பாபு, 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவி விஜயாவிற்கு வாய்ப்பு வழங்கிய சி.வி. சண்முகத்திற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “2021 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தனது மனைவி சந்தித்த தோல்வி இயல்பானது அல்ல; கட்சிக்குள் இருந்த சிலரின் மறைமுக சதிகளாலும், துரோகங்களாலுமே அவர் தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் தோல்வி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூட நேரடியாகப் போட்டியிட்ட வேட்பாளர்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

   

மாவட்ட அளவில் உள்ள உட்கட்சி அரசியலையும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும் கடுமையாக விமர்சித்த சுரேஷ்பாபு, தற்போதைய விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி, சி.வி. சண்முகத்தின் உதவியால் அரசியலில் உயர்ந்தவர் என்றும், பின்னர் அவரே அவருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல் களங்களில் சில நிர்வாகிகள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிய அவர், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இல்லாத புதிய தலைமை கட்சிக்கு உடனடியாகத் தேவை என்று வலியுறுத்தினார்.

 

இறுதியாக, “தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் தலைமை மாற்றத்தையே விரும்புகின்றனர்; தற்போதைய தலைமை தொடர்ந்தால் கட்சி மேலும் வீழ்ச்சியடையும். அதேவேளையில் சி.வி. சண்முகத்தை பொதுச்செயலாளராக நாங்கள் பரிந்துரைக்கவில்லை, அவரும் அந்தப் பதவியை விரும்பவில்லை. தற்போதைய தலைமையைத் தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தாம் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யென யாராவது நிரூபித்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார்” என்றும், கட்சியின் எதிர்கால நலனுக்காக இந்தத் தலைமை மாற்றம் மிகவும் அவசியம் என்றும் சுரேஷ்பாபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.