தமிழக அரசியலில் தற்போதைய தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திண்டிவனத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உண்மையான போட்டி என்பது காலங்காலமாக இருந்து வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையேதான் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். புதிய அரசியல் வரவுகள் குறித்து கவலைப்படாமல், தொண்டர்கள் விழிப்புடன் களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு அதிமுக பல அரசியல் சவால்களைச் சந்தித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வைகோ, விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற மாற்று சக்திகள் உருவெடுத்த போதும் அதிமுகவின் வாக்கு வங்கியை எவராலும் அசைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதால் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடாது என்றும், “நாளைக்கு நடிகர் சிம்பு கூட அரசியலுக்கு வரலாம், ஆனால் அதற்காக நாம் கலங்கத் தேவையில்லை” என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.
மேலும், அதிமுக தொடங்கப்பட்டதே திமுக எனும் ‘தீய சக்தியை’ எதிர்ப்பதற்காகத்தான் என்பதை நினைவூட்டிய சி.வி. சண்முகம், இரட்டை இலைக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று மார்தட்டினார். சினிமா தியேட்டரில் விசில் அடிப்பதற்கும், தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று விமர்சித்த அவர், மற்ற கட்சிகளைப் பற்றி கவலைப்படாமல் திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
