வன்னியர் அரசியலில் திடீர் திருப்பம்…. ராமதாஸ் இடத்தை நிரப்ப சி.வி. சண்முகத்தின் பாய்ண்ட் பிளான்…. அரண்டு போன அதிமுக, திமுக….!

By Nanthini on புரட்டாதி 15, 2026

Spread the love

டாக்டர் ராமதாஸுக்குப் பிறகு வன்னியர் சமூகத்தின் முன்னணி அரசியல் தலைமை யார் என்ற கேள்வி அச்சமூக மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ராமதாஸின் மகனான அன்புமணி பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும், அவரைச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப் பலர் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உருவாகும் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வன்னியர் சமூகத்தின் அடுத்தகட்டத் தலைவராக உருவெடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

   

சமீபகாலமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலையை எடுத்துள்ள சி.வி. சண்முகம், தனது புதிய அரசியல் நகர்வாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தொழிலதிபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் அச்சமூகத்தின் முக்கிய ஆளுமைகளின் ஆதரவு அவருக்குத் திரண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி எல்லைகளைத் தாண்டி சமூகத்தின் குரலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

   

தனது முதல்கட்ட அரசியல் நகர்வாக, வன்னியர் சமூகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலைவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ஆம் தேதி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சி.வி. சண்முகம் முடிவு செய்துள்ளார். இந்த நிகழ்வின் போது, அவரது ஆதரவாளர்கள் மற்றும் வன்னியர் சமூக அமைப்புகள் பெரும் திரளான மக்களைத் திரட்டி, அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

 

சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடி அரசியல் வியூகம், பாமகவுக்கு மட்டுமின்றி அதிமுக மற்றும் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சாயம் பூசப்படாத வன்னியர் சமூக அமைப்புகளின் தலைவர்களும் இவரது இந்த நகர்வை உற்றுநோக்கி வருகின்றனர். டாக்டர் ராமதாஸுக்குப் பிறகு ஏற்படும் தலைமுறை மாற்றத்தில், சி.வி. சண்முகம் வன்னியர் சமூகத்தின் நம்பிக்கைக்குரிய புதிய தலைவராக உருவெடுப்பாரா என்பதை வரும் நாட்களில் நிகழும் அரசியல் மாற்றங்களே தீர்மானிக்கும்.