வாரணாசியில் உள்ள மண்டூவாடி காவல் எல்லைக்குட்பட்ட மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில், ரூ.4.71 லட்சம் மதிப்பிலான அதிநவீன KTM பைக்கை நபர் ஒருவர் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷோரூமிற்குள் புகுந்த அந்த நபர், சுமார் நான்கரை மணி நேரம் அங்கு நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
அந்த நான்கரை மணி நேரத்தில், அந்த திருடன் மிகவும் நிதானமாக காபி போட்டு குடித்துள்ளதுடன், அங்கேயே குளித்து முடித்து தனது ஆடைகளையும் காயவைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பாலிவுட்டின் புகழ்பெற்ற “லுங்கி டான்ஸ்” பாடலுக்கு ஷோரூமிற்குள் உற்சாகமாக நடனமாடியும் உள்ளார். இறுதியில், அந்த கடையின் மேலாளருக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற KTM பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2088187654282322210/video/1
இச்சம்பவம் குறித்து வாரணாசி வருணா மண்டல துணை காவல் ஆணையர் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியைப் பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
