“வாழ்க்கையையே கெடுத்துட்டியே”… 63 வயது முதியவரின் ஆசைக்கு இணங்க மறுத்த 26 வயது பெண்… வாசலில் கோலம் போடும்போது நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தன் தந்தை பாண்டுரங்கனுடன் வாழ்ந்து வந்தவர் 26 வயதுடைய காமாட்சி. நேற்று காலை இவர் தனது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, இரும்பு பைப்பால் சரமாரியாகத் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மகளைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தை பாண்டுரங்கனும் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார், காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணையில் இறங்கினர்.

   

போலீசாரின் துரித விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த 63 வயதுடைய ரியல் எஸ்டேட் அதிபரான மகேந்திரன் என்பவர் இந்த கொடூர கொலையைச் செய்தது தெரியவந்தது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஜெயக்குமார் குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல முக்கிய தகவல்கள் வெளியாகின. வசதியானவரான மகேந்திரன், பாதிக்கப்பட்ட காமாட்சிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனியாக வாழ்ந்து வந்த இளம் பெண்ணிடம் தவறான முறையில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர் முயன்றுள்ளார்.

   

மகேந்திரனின் ஆசைக்கு இணங்க மறுத்த காமாட்சி, தனக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக்கேட்கத் துணிந்தார். ஏனெனில், கிராமத்தில் காமாட்சி தன்னுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக மகேந்திரன் அவதூறு பரப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை நேரில் வரவழைத்து, அவர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கும் காட்சிகளைத் தன் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், “என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே” என்று காமாட்சி ஆவேசமாகக் கேள்வி கேட்க, குற்ற உணர்ச்சியோடு மகேந்திரன் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

இதற்கிடையே, தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் காமாட்சியின் செல்போனை வாங்கி அந்த வீடியோவை மகேந்திரன் அழித்த போதிலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவின. இதனால் பெரும் அவமானமும் அதிர்ச்சியும் அடைந்த மகேந்திரன், நேற்று காலை வயலுக்குச் செல்லும்போது காமாட்சி வாசலில் தனியாக இருப்பதைக் கண்டு, ஆத்திரத்தில் இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மகேந்திரனைக் கைது செய்துள்ள போலீசார், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.