30 பந்துகளில் 34 ரன்கள்… சென்னை அணியை கவிழ்த்த மேத்யூ ஷார்ட்… கையில் இருந்த வெற்றியை ஐதராபாத்திடம் தாரைவார்த்தது எப்படி..?

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 194 ரன்கள் குவிக்க, இலக்கை துரத்திய சென்னை அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை நழுவவிட்டது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், களத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட சில வியூக ரீதியான தவறான முடிவுகளே தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அகீல் ஹொசைனுக்குப் பதிலாக மேத்யூ ஷார்ட்டை அணியில் சேர்த்தது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஐதராபாத் அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதை கருத்தில் கொண்டு, ஆஃப் ஸ்பின் வீசுவார் என்ற ஒரே காரணத்திற்காக ஷார்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத அவர், பந்துவீச்சில் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கியதோடு, பேட்டிங்கிலும் அதிரடி காட்டத் தவறி 30 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

   

மேலும், மேத்யூ ஷார்ட்டை அணியில் இணைத்ததால் பேட்டிங் வரிசையில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டன. வழக்கமாக 4-வது இடத்தில் களமிறங்க வேண்டிய டிவால்ட் பிரெவிஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோரின் வரிசை மாற்றப்பட்டது சிஎஸ்கேவின் ரன் வேகத்தை வெகுவாகக் குறைத்தது. ஷார்ட் களத்தில் இருந்தபோது பவுண்டரிகள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். இது அணியின் ஒட்டுமொத்த உத்வேகத்தை பாதித்து, ஆட்டத்தின் போக்கை ஐதராபாத் அணியின் பக்கம் திருப்பியது.

   

இவற்றுடன் ஆயுஷ் மாத்ரேவின் காயம் தொடர்பான மேலாண்மையும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் அவதிப்பட்ட அவரை ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ செய்து வெளியே அழைத்துச் சென்றிருக்க வேண்டிய நிலையில், பிசியோ மற்றும் கேப்டனின் தவறான முடிவால் ஒரு முக்கியமான விக்கெட்டை சிஎஸ்கே இழந்தது. வரும் போட்டிகளில் ‘மேட்ச் அப்’ என்ற பெயரில் தேவையற்ற மாற்றங்களைச் செய்யாமல், நிலையான பிளேயிங் லெவனுடன் விளையாடினால் மட்டுமே சென்னை அணியால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.