தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகியோர், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 5 வயது தனுஷ் மற்றும் 2 வயது ரேவந்த் ஆகிய இரு குழந்தைகளையும் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் அதிகாரிகள் சோதனையிட்டபோது, குழந்தைகளின் உடலில் தீக்காயங்கள், நகக் கீறல்கள் மற்றும் 2 வயது குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், மூத்த குழந்தை இந்துவின் முதல் கணவருக்குப் பிறந்தது என்பதும், தம்பதியினர் இருவரும் சேர்ந்து கரண்டியை பழுக்கக் காய்ச்சி சூடு வைத்தும், சிகரெட்டால் சுட்டும், மனரீதியாக வசித்தும் குழந்தைகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும் அம்பலமானது.
இந்த கொடூரச் செயலையடுத்து, உடனடியாக மீட்கப்பட்ட இரு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை சித்ரவதை செய்த தாய் மற்றும் தந்தை இருவர் மீதும் பிஎன்எஸ் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயும் தந்தையுமே பச்சிளம் குழந்தைகளை இவ்வாறு சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
