தனியார் பள்ளிகளுக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் சிக்கியுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இறுதியில் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத சங்கம் நடத்தி வந்த பி.டி.அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், தங்களுக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல பள்ளி நிர்வாகிகளிடம் பெருந்தொகையை வசூலித்து ஏமாற்றியதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி முத்துக்குமார் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு மனுதாரர் இந்த பிரம்மாண்ட மோசடியில் ஈடுபட்டுள்ளார்; இந்த மோசடி தொடர்பாக இதுவரை 47 பள்ளிகளின் நிர்வாகிகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், பல்வேறு பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கு விசாரணை தற்போது ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதாலும் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், முத்துக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார். இதனால் இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
