சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம், சுமார் 300 மீட்டர் தொலைவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் அழுகுரல் கேட்டுச் சென்று பார்த்தபோது, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து விரைந்து வந்த நீலாங்கரை காவல்துறையினர் அக்குழந்தையை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினரிடமும், அரசு குழந்தைகள் நலக்குழுவிடமும் விவரம் தெரிவிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்றவர்கள் யார், என்ன காரணத்திற்காக அங்கு விட்டுச் சென்றார்கள் என்பது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
