ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இனிமேல், இதுபோன்ற வலைத்தளங்களில் வரன் தேடுவோர் தங்களது வயது, முகவரி, பிறந்த தேதி மற்றும் திருமண நிலை போன்ற அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யும் போது, அந்தத் தளங்கள் அவற்றை முறையான ஆவணங்களைக் கொண்டு சரிபார்த்த பின்னரே பொதுப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக, தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களை பயன்படுத்தி சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆதார் தகவல்களைப் பகிர விருப்பம் இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்று அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கலாம். வலைத்தளங்களில் உலாவும் போலி கணக்குகளை அறவே ஒழித்து, திருமண ஆசை காட்டி நடக்கும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
