திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சங்கம்பாளையம் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு அலுவலகத்தைத் திறந்து வைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதை திமுக தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது பேசிய பெ.சண்முகம், “ஆர்.எஸ்.பாரதி மூத்த அரசியல்வாதி, பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் இதுபோன்று வாய் துடுக்காகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்தபோதுதான் நாங்கள் உட்பட சிலர் தோல்வியடைந்தோம். அதற்காகத் திமுகதான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாமல் அவர்களாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. மூத்த அரசியல் தலைவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். இளைய தலைமுறைக்கும் வழிகாட்டும் வகையில் இத்தகையப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாட்டின் ஜனநாயக உரிமைகள் குறித்துப் பேசிய அவர், நாடு முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கேரளாவில் காங்கிரஸுடனும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸுடனும் தங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்த அவர், இந்த ஜனநாயகப் போராட்டத்தில் திமுகவும் முழுமையாக இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரைச் சந்திக்க உள்ள திமுகவின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
