“விஜய் ஆட்சியை கலைக்கப் பார்க்கிறாரா ஸ்டாலின்?”…. கொதித்தெழுந்த சிபிஐ வீரபாண்டியன்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்றும் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்த சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக தற்போது ஆட்சி அமைத்து நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடக்கும் ஓர் அரசு கவிழ்ந்துவிடும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியது தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்திற்காகவும், நாட்டு நலனுக்காகவும், தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும் எங்களால் ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் களமாட முடியும், தனித்தும் களமாட முடியும் என்பதை இந்த நேரத்தில் நான் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்” என்று கூறி, தங்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

   

தொடர்ந்து செய்தியாளர்கள், “தவெக ஆட்சி விரைவில் கவிழும்” என்ற மு.க.ஸ்டாலினின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வீரபாண்டியன், “மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர், பழுத்த அரசியல் தலைவர் மற்றும் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களிடம் அரசியல் பயின்றவர். ஜனநாயகத்தில் இதுபோன்ற கருத்துகள் எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது; மக்கள் அந்த அரசுக்குத் தங்களின் பேராதரவை வழங்கி வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும், வழிமொழிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

   

மேலும், தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போதும் ஜனநாயகத்தின் வழியில்தான் நிற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். “சட்டப்படி இந்த ஆட்சி சுமுகமாக நடைபெற வேண்டும் என்றுதான் அவர் வாழ்த்திச் சொல்ல வேண்டுமே தவிர, ஆட்சி கலைந்துவிடும் என்று சொல்வது உகந்ததல்ல. இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துகள் அவருடைய அரசியல் உயரத்திற்கும், அனுபவத்திற்கும் சற்றும் பொருத்தமானது இல்லை” என்று மு. வீரபாண்டியன் மிக நேரடியாகவும் கனிவாகவும் ஸ்டாலினின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.