தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள பசப்பனதொட்டி கிராமத்தில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளைத் தீயில் தாண்டச் செய்யும் ‘கிச்சு ஹாய்சோடு’ (Kichchu Haisodu) என்ற வினோத நேர்த்திக்கடன் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று கடைப்பிடிக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், கிராம மக்கள் தங்கள் மாடுகளைக் குளிப்பாட்டி, மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் ஊரின் மையப்பகுதியில் வைக்கோல் மற்றும் விறகுகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தை, நூற்றுக்கணக்கான கால்நடைகள் ஒவ்வொன்றாகத் தாண்டிச் சென்றன.
இந்த வினோதச் சடங்கின் பின்னணியில் ஆழமான நம்பிக்கை ஒன்று நிலவுகிறது. கால்நடைகளை இவ்வாறு கொளுந்துவிட்டு எரியும் தீயின் மீது தாண்டச் செய்வதால், அவை நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக இருக்கும் என்றும், கிராமத்தின் செல்வம் பெருகும் என்றும் மக்கள் நம்புகின்றனர். பசப்பனதொட்டி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரளாகப் பங்கேற்ற இந்த நிகழ்வு, அப்பகுதியின் கலாச்சாரப் பிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கால்நடைகளுக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனத்துடன் நடத்தப்படும் இந்த நிகழ்வு, சங்கராந்தி கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
