கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் +2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பழக்கம் மூலம் கடுமையான பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியில் காவல்துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்த சூழலில், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இந்த அறிமுகம் காதலாக மாறி, மாணவியை பல்வேறு இடங்களுக்கும், கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதிக்கும் அழைத்துச் சென்று அஜன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.
அஜனின் மிரட்டலில் இருந்து தப்பிக்க வழிதேடிய அம்மாணவி, வேம்பனூரைச் சேர்ந்த தனது பெரியப்பா மகனான விவேக் (32) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், உதவி செய்ய வேண்டிய உறவுமுறை அண்ணனே மாணவியின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த விவகாரம் விவேக்கின் நண்பரான பரப்புவிளையைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவருக்கு தெரியவரவே, அவரும் அம்மாணவியைச் சூழ்ச்சியாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். வெளியூரில் உள்ள தனது உறவினரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்று, அவருக்குக் கட்டாயப்படுத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, தினேஷின் நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவரும் இணைந்து, சுமார் ஒரு வாரம் வரை அம்மாணவியை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, மது கொடுத்து மாறி மாறி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மாணவி திடீரென மாயமானதால் பதறிய பெற்றோர், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு மாணவி தனது பாட்டி வீட்டுக்குத் திரும்பினார். அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தினேஷும் ஆன்றோ ஜெரிஷும் போதையில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பி வந்ததாகக் கண்ணீருடன் மாணவி விவரித்த போதே, இத்தனை நாள்களாக நடந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதையடுத்து, இவ்வழக்கு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் மூன்று வாரங்கள் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், முதன்மை குற்றவாளியான அஜன், உறவினர் விவேக் மற்றும் சென்னையில் தலைமறைவாக இருந்த தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய ஒரு சாதாரண பழக்கம் ஒரு சிறுமியின் வாழ்வையே சீரழித்துள்ள இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
