குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில், எலக்ட்ரீசியன் ஒருவரின் மனைவி குளிப்பதை அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஹர்திக் என்பவர் மறைந்திருந்து காணொளி எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த அந்தரங்கக் காணொளியைத் காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப் பெண்ணை ஹர்திக் தொடர்ந்து மிரட்டிப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், ஒருகட்டத்தில் இக்கொடூரச் சம்பவத்தைத் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். குடும்ப அவமானத்திற்கு அஞ்சி காவல் துறையிடம் செல்லாத அந்தத் தம்பதியினர், ஹர்திக்கை வஞ்சகமாகத் தங்களது வீட்டிற்கு வரவழைத்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.
அதன்படி, கடந்த 11-ஆம் தேதி தம்பதியின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற சமயம் பார்த்து ஹர்திக் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து ஹர்திக்கை அமுக்கிப் பிடித்து, ஒயரால் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் சடலத்தைப் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்துவிட்டுத் தலைமறைவாகினர். மகனைக் காணவில்லை என ஹர்திக்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், எலக்ட்ரீசியன் வீட்டிலிருந்து உடலைக் கைப்பற்றித் தம்பதியினரைக் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி உடைக்கப்பட்டதால், அத்தகைய வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
