உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள ஹர்ஷில் பள்ளத்தாக்கில் வெள்ளம் வருவதற்கு முன்பே நேபாள தம்பதியினரான காளி தேவி – விஜய் சிங். தங்களுடைய குழந்தைகளை விட்டு விட்டு வேலைக்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது உயிர் பிழைத்தாலும், தங்கள் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது அந்தத் தம்பதியினருக்குத் தெரியவில்லை. பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்புகளால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு குழந்தைகள் காணாமல் போனார்கள். வெள்ளபெருகுக்கு முன்னதாக அவர்கள் குழந்தைகளிடம் பேசியபோது, ‘அப்பா, நாங்கள் உயிர் பிழைக்க மாட்டோம், அதிக தண்ணீர் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் சுமார் 47 கி.மீ தொலைவில் உள்ள பத்வாரிக்கு அவர்கள் புறப்பட்டதாக காளி தேவி கூறியுள்ளார்.
பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அவர்கள் மட்டுமே. மறுநாள், மீதமுள்ள 24 உறுப்பினர்களில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. புதன்கிழமை, தம்பதியினர் கங்காவதிக்கு நடந்து சென்றுள்ளார்கள். ஆனால் ஒரு முக்கியமான பாலம் அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களால் அங்கிருந்து மேலும் செல்ல முடியவில்லை. எனவே அவர்களின் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், அல்லது அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காளி தேவி கூறுகையில், ‘நாங்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியபோது, இந்த பிராந்தியத்திற்கு இதுபோன்ற ஒரு பேரழிவு வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. வரவிருக்கும் வெள்ளம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் என் குழந்தைகளை விட்டுச் சென்றிருக்க மாட்டேன். ஹர்ஷில் பள்ளத்தாக்குக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் குழந்தைகளை நாங்களே கண்டுபிடிப்போம்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
