ரெடிட் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் ஒரு ஊழியர் பகிர்ந்த பதிவு இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தினமும் காலை 7:30 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 4:00 மணி வரை பணியாற்றுவதோடு, 45 நிமிடங்கள் மதிய உணவு இடைவேளை எடுத்து வந்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சிறப்பாக முடித்தாலும், நாளொன்றுக்கு 8 மணி நேர கணக்கில் 15 நிமிடங்கள் குறைவாக வேலை செய்வதாகக் கூறி அவரது மேலாளர் அவரை எச்சரித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 15 நிமிட குறையை சுட்டிக்காட்டி, இதுகுறித்து விவாதிக்க மூத்த அதிகாரிகளுடன் ஒரு முறையான கூட்டத்திற்கும் அந்த மேலாளர் ஏற்பாடு செய்துள்ளார். இது அந்த ஊழியருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் தன் வேலையின் சிறப்பான தரத்தை எடுத்துக்கூறி நியாயம் கேட்பதா அல்லது எந்த தர்க்கமும் இன்றி அமைதியாக மதிய உணவு நேரத்தை குறைத்துக்கொண்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா எனத் தெரியாமல் அவர் தவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள்வது என அவர் இணையவாசிகளின் ஆலோசனையை நாடியுள்ளார்.
இந்த பதிவு கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் குறித்த பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு ஊழியரின் உண்மையான உழைப்பு மற்றும் உற்பத்தித் திறனை மதிப்பிடுவதை விட, அவர்கள் எவ்வளவு நேரம் இருக்கையில் அமர்ந்துள்ளார்கள் என்பதை மட்டுமே இயந்திரத்தனமாக கணக்கிடும் நிறுவனங்களின் போக்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ‘வேலையின் தரம் முக்கியமா அல்லது கடிகார முட்கள் முக்கியமா?’ என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி அந்த ஊழியருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
