சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தின்போது, “கரூரிலேயே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை முடித்திருக்கலாம்” என சரவணன் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை விழுப்புரம் பகுதியில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரவணன் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்கான போதிய முகாந்திரம் இல்லை என்று சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
