2024-ல் ‘நோ’.. 2026-ல் ‘யெஸ்’… அறிவாலயத்தில் கசிந்த 5 சீட் ரகசியம்…. சீக்ரெட் டீலில் கையெழுத்திட்ட ‘உலக நாயகன்’….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி மீண்டும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கு என ‘டார்ச் லைட்’ சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட நிலையிலும், வரும் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை கமல்ஹாசன் ஏற்கவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது தொகுதிகளைக் கைப்பற்றுவதிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இந்த அதிரடி முடிவை மநீம எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சின்னம் தொடர்பான விட்டுக்கொடுத்தல் மூலம், திமுக கூட்டணியில் சுமார் 4 முதல் 5 தொகுதிகள் வரை மநீம எதிர்பார்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்துடன் விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தொகுதிகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதை விட, ஆளுங்கட்சியின் பலமான சின்னத்தில் களம் இறங்குவது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என மநீம நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்த வியூகம் கமல்ஹாசன் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.