“6 தொகுதி இடைத்தேர்தல்…. தவெகவில் யாருக்கு சீட்?”… கசிந்தது ரகசிய லிஸ்ட்…. கட்சிக்குள் வெடித்த கோஷ்டி மோதல்….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுமட்டுமன்றி மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதால், தமிழகத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக சார்பில் இந்த 6 தொகுதிகளிலும் போட்டியிடப் போவது யார் என்பதில் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, தங்களின் எம்.எல்.ஏ பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தவெகவிற்கு வந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள், “நாங்கள் உங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்தோம், எனவே அதே தொகுதிகளில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட எங்களுக்கே முன்னுரிமை தந்து சீட் வழங்க வேண்டும்” என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

   

மறுபுறம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தவெகவின் தீவிர நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள், “இடைத்தேர்தலிலாவது எங்களுக்கு முன்னுரிமை தந்து சீட் கொடுக்க வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களோடு சேர்த்து, அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த புதிய முகங்களும் தங்களுக்கு சீட் வேண்டும் என முட்டி மோதுகின்றனர். பழைய நிர்வாகிகள், கட்சி மாறிய முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாற்றுக்கட்சியினர் என மூன்று தரப்பும் ஒரே நேரத்தில் சீட்டுக்காக மல்லுக்கட்டுவதால், யாருக்கு வாய்ப்பளிப்பது என்ற பெரும் குழப்பத்திலும் தர்மசங்கடத்திலும் தவெக தலைமை ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.