“35 கோடி தர்றோம்… வாட்ஸ்அப் காலில் வந்த மிரட்டல்”…தவெக எம்.எல்.ஏ-வை அலறவிட்ட ‘அந்த’ இரவு போன் கால்… லிஸ்ட்டில் இருக்கும் பெரிய தலைகள்…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் முழுமையாகக் கிடைக்காததால் மாநில அரசியலில் பரபரப்பு ஓயாமல் நீடித்து வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சாதகமாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது திருவல்லிகேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல் அறிக்கையின் படி, கடந்த ஜூன் 26ஆம் தேதி ஐபிடிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்பு கொண்டு ஒரு “நல்ல விஷயம்” பற்றிப் பேச வேண்டும் எனக் கூறி நேரில் சந்திக்க முயன்றுள்ளார். இளையராஜா அதற்கு மறுக்கவே, அன்றைய தினமே இரவில் மீண்டும் வாட்ஸ்அப் மூலம் அழைத்த திருநாவுக்கரசு, முக்கிய அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தான் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். “தற்போது அமையவுள்ள ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது, எங்கள் தயவின்றி ஆட்சி நிலைக்காது” எனக் கூறிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ரூ.35 கோடி தருவதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் எம்.எல்.ஏ-வின் குடும்பத்தினர் உயிருடன் இருக்க மாட்டார்கள் எனக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், இதற்குச் சம்மதித்தால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் நரேன் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து அடுத்தகட்ட விஷயங்களைக் கவனிப்பார்கள் என்றும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

   

இந்தக் குதிரை பேரப் புகார் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு, அரசு அதிகாரியிடம் லஞ்சம் பேச முயற்சித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், ரமேஷ் மற்றும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி கார்த்தி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடேறியுள்ளது.