கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி மற்றும் ஆர்.பூசாரிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எலக்ட்ரீசியன் திருப்பதி, கட்டிட மேஸ்திரி திருப்பதி. இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, எலக்ட்ரீசியன் திருப்பதிக்கும், மேஸ்திரியின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேஸ்திரிக்கு தெரியவந்ததும், இருவரையும் கடுமையாக எச்சரித்ததோடு, எலக்ட்ரீசியனின் குடும்பத்தாரிடமும் இதுபற்றி முறையிட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் தங்களது தகாத உறவை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர்.
தமது மனைவியுடனான தொடர்பை அவர் துண்டிக்காததால் கடும் மனவேதனையிலும் ஆத்திரத்திலும் இருந்த மேஸ்திரி, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி எலக்ட்ரீசியனை மது குடிக்க அழைத்துள்ளார். கூலங்கொட்டாய் என்ற இடத்தில் இருவரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் எல்லைமீறிய நிலையில், தனது மனைவியுடனான உறவைச் சுட்டிக்காட்டி ஆவேசமடைந்த மேஸ்திரி திருப்பதி, எலக்ட்ரீசியனை உடைந்த மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தச் சம்பவம் குறித்து கொலையுண்ட எலக்ட்ரீசியனின் மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேஸ்திரி திருப்பதியை கைது செய்தனர். இந்த கொலை வழக்கானது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. முழுமையான விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளியான மேஸ்திரி திருப்பதிக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லதா அதிரடி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
