தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய், “திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் இருந்தாலும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக பக்கமே நிற்கிறார்கள்” என்று பேசினார். விஜய்யின் இந்த அதிரடி பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
விஜய்யின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளர் ராம் மோகன், விஜய் ஒரு அரசியல் உள்நோக்கத்துடன் அப்பட்டமான பொய்யைக் கூறி வருவதாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தவெக திரைமறைவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் கொள்கை தெளிவு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் தலைமை அந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது அறிக்கையில் காங்கிரஸுக்கும் திமுகவுக்குமான உறவு என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு வலுவான கொள்கைக் கூட்டணி என்று ராம் மோகன் சுட்டிக்காட்டியுள்ளார். “திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த விஜய், கரூர் சம்பவத்திற்குப் பிறகு பாஜகவை எதிர்க்கத் துணிவில்லாமல் மௌனம் காக்கிறார்” என்றும் அவர் விமர்சித்துள்ளார். காங்கிரஸில் ஓரிரு நபர்களை மட்டும் இழுத்துவிட்டு, ஒட்டுமொத்தக் கட்சியும் தன் பக்கம் இருப்பதாக விஜய் கூறுவது நகைப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதற்காக நடிகர் விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. “உண்மையான காங்கிரஸ் தவெகவிடம் இருக்கிறது” என்று கூறுவது அரசியல் நாகரீகமற்ற செயல் என்றும், இத்தகைய ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை விஜய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தவெக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
