தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், “தமிழ்நாடு மக்களின் தீர்ப்பைச் சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று காமராஜர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜனநாயக முறையில் மக்கள் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ள போதிலும், ஆட்சி அமைக்க இன்னும் 6 தொகுதிகள் தேவைப்படுவதால் தமிழக அரசியலில் ஒருவித இழுபறி நிலை நீடித்து வருகிறது.
தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பிலிருந்து தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காமராஜரின் குரலில் இந்த வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது.
